மஹோற்சவ காலத் திருமுறைகள் மஹோற்சவத்தின்போது தம்பத்தடியில் ஓதப்படவேண்டிய திருமுறைகள்

 மஹோற்சவ காலத் திருமுறைகள்

மஹோற்சவத்தின்போது தம்பத்தடியில் ஓதப்படவேண்டிய திருமுறைகள்


கணபதி தாளத்தின் பின்

பண் : தக்கராகம்                                               இராகம் : காம்போதி

திருச்சிற்றம்பலம்
மடையில் வாளை பாய மாதரார் 
குடையும் பொய்கைக் கோலக் காவுளான் 
சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் 
உடையுங் கொண்ட உருவ மென்கொலோ.     - சம்பந்தர் 


துணிவளர் திங்கள் துளங்கி விளங்க, 
சுடர்ச்சடை சுற்றி முடித்து, 
பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ, 
ஆரிடமும் பலி தேர்வர்; 
அணிவளர் கோலம் எலாம் செய்து, 
பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற 
மணிவளர் கண்டரோ, மங்கையை வாட 
        மயல் செய்வதோ, இவர்மாண்பே ?. - சம்பந்தர் 

                                    திருச்சிற்றம்பலம்

விநாயகருக்கு மூஷிக தாளம் 

சிவன், அம்பாள்விருஷப தாளத்தின் பின்

பண் : காந்தாரபஞ்சமம்                           இராகம் :கேதாரகௌளை 

திருச்சிற்றம்பலம்
இடரினும் தளரினு மெனதுறு நோய் 
தொடரினு முனகழல் தொழு தெழுவேன் 
கடல்தனி லமுதோடு கலந்த நஞ்சை 
மிடறினி லடக்கிய வேதியனே. 
இதுவோவெமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுனதின் னருளாவடுதுறை யரனே. - சம்பந்தர்


துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும் 
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும் 
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று
துஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே. சம்பந்தர் 
சொற்றுணை வேதியன் சோதி வானவன் 
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் 
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் 
நற்றுணை யாவது நமச்சி வாயவே. -அப்பர் 
திருச்சிற்றம்பலம்


அம்பாளுக்கு சிம்ம தாளத்தின் பின்

பண் : நட்டபாடை                                                 இராகம் : கம்பீரநாட்டை 

திருச்சிற்றம்பலம்
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் 
காடுடையசுட லைப்பொடி பூசிஎன் உள்ளங்கவர் கள்வன் 
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்த அருள்செய்த 
பீடுடைய பிரமாபுரம் மேவிய பொம்மானிவ னன்றே. - சம்பந்தர் 

நத்தார்படை ஞானன்பசு ஏறிந்நனை கவிழ்வாய் 
மத்தம்மத யானையுரி போர்த்த மணவாளன் 
பத்தாகிய தொண்டர் தொழு பாலாவியின் கரைமேல் 
செத்தாரெலும் பணிவான்திருக் கேதீச்சரத்தானே. - சுந்தரர் 
 
அங்கம்மொழி அன்னாரவ ரமரர் தொழுதேத்த 
வங்கம்மலி கின்றகடல் மாதோட்ட நன்நகரில் 
பஞ்கஞ்செய்த பிறைசூடினன் பாலாவியின் கரைமேல் 
செங்கண்ணர வசைத்தான்திருக் கேதீச்சரத் தானே  - சுந்தரர் 
திருச்சிற்றம்பலம்


முருகனுக்கு மயூர தாளத்தின் பின் 

பண் - இந்தளம்                                             இராகம்- மாயாமாளவகௌளை 

திருச்சிற்றம்பலம்
சடையாய் எனுமால் சரண்நீ எனுமால் 
விடையாய் எனுமால் வெருவா விழுமால் 
மடையார் குவளை மலரும் மருகல் 
உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே. - சம்பந்தர் 

பித்தாப்பிறை சூடீபெரு மானேயரு ளாளா 
எத்தான்மற வாதேநினைக் கின்றேன் மனத் துன்னை 
வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூரருட்டுறையுள் அத்தாவுனக் காளாய்இனி அல்லே னெனலாமே. - சுந்தரர்
திருச்சிற்றம்பலம்

 

ஐயனாருக்கு கஜதாளத்தின் பின்

பண் : தக்கேசி                                                     இராகம் - காம்போதி 

திருச்சிற்றம்பலம்
வேதமோதி வெண்ணூல்பூண்டு வௌ;ளை யெருதேறிப் 
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியினுரி தோலார் 
நாதாவெனவு நக்காவெனவு நம்பாவென நின்று 
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநக ராரே. - சம்பந்தர் 

ஆலம் தான் உகந்து அமுது செய்தானை , 
ஆதியை அமரர் தொழுது ஏத்தும் 
சீலம்தான் பெரிதும் உடையானைச் 
சிந்திப்பார் அவர் சிந்தை உளானை 
ஏலவார் குழலாள் உமை நங்கை 
என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற 
கால காலனைக் கம்பன் எம்மானைக் 
        காணக் கண் அடியேன் பெற்றவாறே.  - சுந்தரர்
திருச்சிற்றம்பலம்



Comments

Post a Comment