ஸ்ரீ விநாயகர் ஸ்தப்கம்
குருவே பரமன் கொழுந்தே பணிந்தன்
குவலயம் போற்றும் கணநாதா !
வருவாய் நினைவில் வந்தெனை ஆள்வாய்
வடிவேலனின் சோதரனே !
அருள்வாய் ! உனையே அனுதினம் பணிவேன்
அன்னை பராசக்தி அருள்மகனே !
திருமால் மருகா ! திருவடி சரணம்
தினரஷகனே கணநாதா !
ஆனையின் அன்பன் அழகு முருகனின்
அண்ணனாய் உலகில் அவதரித்தாய்
ஆனைமுகத்தோடு ஐங்கரங் கொண்டதோர்
அற்புத வடிவே கணநாதா !
யானென தென்னும் எண்ணங்கள் நீக்கி
இகபரசுகமதை எனக்களிப்பாய்
யானுனை என்றும் இராப்பகல் தொழுதேன்
என்துயர் களைவாய் ! கணநாதா !
குஞ்சரனே எழிற் குஞ்சரிநாதனாம்
குகசரவணபவ சோதரணே !
வெஞ்சமரெதிலும் வெற்றியே தருவாய்
வேழமுகத்தோய் கணநாதா
அஞ்சிடும் அன்பருக் கபயம் அளிப்பாய்
அரவணைத் தெனையும் ஆண்டருள்வாய் !
பஞ்சமி பைரவி பார்வத புத்திரி
பார்வதி மைந்தா கணநாதா !
வல்லபை நாதா விக்ன விநாயகா
வாழ்ததிப் பணிந்தேன் உன்பதமே
வல்வினை எல்லாம் வலிமை இழந்தே
வாடிடச் செய்வாய் கணநாதா
தொல்வினை யாலிவன் துயருறும் அடியேன்
துன்பமெல்லாம் நீ துடைத்திடுவாய்
அல்லொடு பகலும் அனவரதும் உன்
அடியினை தொழுவேன் கணநாதா !
வானொடு நீரும் வளியும் தீயும்
வையகம் யாவும் உன் வடிவே !
மானிட வாழ்வை மகிழ்வுறச் செய்வாய்
மங்கலப் பொருளே கணநாதா
தேனோடு பாலும் தொங்கொடு பழமும்
தெவிட்டா அமுதம் தினம் படைப்பேன்
ஊனொடு உயிரும் உயர்வும் புரப்பாய்
உன்னடி தொழுதேன் கணநாதா !
ஓமெனும் வடிவே உன் வடிவாமென
உலகிற்கெல்லாம் நீ உணர்த்திடுவாய்
ஆம் எனச் சொல்வாய் அன்னை குமாரா
ஆதரித்தருள்வாய் கணநாதா !
சுபம்.


Comments
Post a Comment